குடியாத்தம் திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் காலமானார்

வேலூர், பிப்ரவரி-28

உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குடியாத்தம் தி.மு.க. எம்.எல்.ஏ. காத்தவராயன் இன்று காலமானார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் காத்தவராயன் (வயது59). தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு மே மாதம் 18 தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. பேரணாம்பட்டு சின்ன பஜார் வீதியில் தனது சகோதரர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு இருதயத்தில் பிரச்சனை ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். அது குணமாகாததால் கடந்த மாதம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை சீரடையவில்லை. இந்த நிலையில் எம்.எல்.ஏ. காத்தவராயன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

நேற்று தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த கே.பி.பி.சாமி உடல் நலக்குறைவால் காலமான நிலையில் மற்றொரு தி.மு.க. எம்.எல்.ஏ உயிரிழந்திருப்பது அக்கட்சியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *