இந்தியன் – 2 விபத்து: இயக்குநர் ஷங்கர் ஆஜராகி விளக்கம்

சென்னை, பிப்ரவரி-27

இந்தியன் 2 விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கர் மத்திய மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். 

இந்தியன் 2 படப்பிடிப்பின்போது, கிரேன் உடைந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக லைகா நிறுவனத்தின் மேலாளர் உட்பட 4 பேர் மீது நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு துணை ஆணையர் நாகஜோதி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து நேர்ந்த இடத்தில் தானும் இயக்குநர் சங்கரும் இருந்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

இதனால் இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் நாகஜோதி முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார். காவல் ஆணையர் விஸ்வநாதன் முன்னிலையில் மத்திய குற்றப்பிரிவினர் இயக்குநர் ஷங்கரிடம் விசாரணை நடத்தினர்.

படப்பிடிப்பின் போது யாரெல்லாம் இருந்தார்கள், எங்கிருந்து கிரேன் வரவழைக்கப்பட்டது? தொழில்துறைக்கு பயன்படுத்தும் கிரேனை படப்பிடிப்புக்கு பயன்படுத்தியது ஏன்? என்பது குறித்து இயக்குநர் ஷங்கரிடம் விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *