ரஜினியின் மலிவான அரசியல், அவரது எதிர்காலத்திற்கு நல்லதல்ல- பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்

கோவை, பிப்ரவரி-27

மத்திய அரசை எதிர்க்கும் ரஜினியின் அரசியல் அவரது அறியாமையை காட்டுகிறது. அது ரஜினியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் எச்சரித்துள்ளார்.

டெல்லி வன்முறை குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று அளித்த பேட்டியில், டெல்லி கலவரத்தை அடக்காதது மத்திய உளவுத்துறையின் வீழ்ச்சி. அது உள்துறை அமைச்சகத்தின் தோல்வி. வன்மையாக கண்டிக்கிறேன். இரும்புக்கரம் கொண்டு அடக்குங்கள் என ரஜினி பேசினார்.

இந்நிலையில் ரஜினியின் பேட்டிக்கு தமிழக பாஜக பொருளாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பேசியதாவது: ரஜினியின் பேட்டியில் சிஏஏ விவகாரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள வன்முறை குறித்த கவலையை உணர முடிகின்றது. ரஜினிகாந்த் உளவுத்துறை செயல்படவில்லை என சொல்வதும், மத்திய அரசை கண்டிப்பதும் சரியான விமர்சனங்கள் அல்ல.

டெல்லி வன்முறை திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட சதிச்செயல். இதை மத்திய அரசு கவனமாக, நேர்த்தியாக கையாண்டுள்ளது. யாரையோ திருப்திப்படுத்த ரஜினி இப்படிப் பேசி இருக்கின்றார். நடுநிலைமை என காட்டுவதற்காக ரஜினி இப்படி சொல்லி இருக்கலாம். ஆனால், இது நடுநிலைமை அல்ல.

ஒரு சார்பு நிலைமை. வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ராஜினாமா செய்ய வேண்டும் என ரஜினி பேசியிருப்பது மலிவான அரசியல். பாஜக மத அரசியல் செய்யவில்லை. மற்ற அரசியல் கட்சியினர்தான் மதவாத அரசியல் செய்கின்றனர். மத்திய அரசைக் கண்டிப்பதும் அவருடைய அறியாமை.

ரஜினிகாந்த் மற்றவர்களை பார்த்து மலிவான அரசியலை செய்வது, சொல்லாமல் இருப்பது அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது. பாஜகவின் கருத்தை திருப்பிப் பேசுவதில் ரஜினிகாந்த் பெருமைப்பட வேண்டும். வெட்கப்பட, வருத்தப்பட, கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

ரஜினி பேசியதில் பாஜகவிற்கு எதிரான கருத்துகள் இருப்பதாக தெரியவில்லை. மாறாக அவர் தெரிவித்த கண்டனங்கள் அறியாமையால், மற்றவர்களோடு தானும் முன் நிற்க வேண்டும் என்ற கட்டாயத்தால் சொல்லி இருக்கலாம்”. இவ்வாறு எஸ்.ஆர்.சேகர் பேட்டி அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *