இந்திய கம்யூ. தலைவர் நல்லக்கண்ணுக்கு அரசு வீடு வழங்கி அரசாணை வெளியீடு
சென்னை, பிப்ரவரி-27
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு வீட்டுவசதி வாரியம் சார்பாக அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு கடந்த 12 ஆண்டுகளாக சென்னை தியாகராயநகரில் உள்ள அரசின் இலவச குடியிருப்பில் வசித்து வந்தார். இது என் கொள்கைக்கு எதிரானது என்று கூறி இலவசமாக கொடுத்த வீட்டுக்கு, வாடகை கட்டிவந்தார் நல்லகண்ணு. இந்த நிலையில், 1953-ம் ஆண்டு கட்டப்பட்ட அந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மிகவும் பழுதாகி இருந்ததால் அதில் குடியிருந்தவர்களை காலி செய்யும்படி கேட்டு தமிழக அரசு கேட்டுக்கொண்டது.
இதை ஏற்றுக்கொண்ட நல்லகண்ணு, அங்கிருந்து வெளியேறி, கே.கே.நகரில் உள்ள வீடு ஒன்றிற்கு குடிபெயர்ந்தார். இதற்கிடையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அப்போது தொலைபேசி வாயிலாக நல்லகண்ணுவை தொடர்பு கொண்டு, உங்களுக்கு அரசு வீடு தர தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். இந்த நிலையில் சென்னை நந்தனம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பாக நல்லகண்ணுக்கு வீடு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.