சபாஷ் நண்பர்… இது தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜபாட்டை-ரஜினிக்கு கமல் பாராட்டு
சென்னை, பிப்ரவரி-27
மத்திய அரசை கண்டித்து நடிகர் ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் பத்திரிகையாளர்ளை நடிகர் ரஜினி சந்தித்தார். அப்போது டெல்லி வன்முறை சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
டெல்லி வன்முறை சம்பவங்கள் என்பது மத்திய உளவுத்துறையின் தோல்வி. இதற்காக மத்திய அரசை நான் கண்டிக்கிறேன். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை தந்திருந்த சமயத்தில் இத்தகைய வன்முறை சம்பவங்கள் நடந்திருப்பது உளவுத்துறையின் தோல்விதான். இந்த போராட்டங்களை ஆரம்பத்திலேயே அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும் என்று பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சபாஷ் நண்பா… அப்படி வாங்க! என்று மத்திய அரசைக் கண்டித்து நடிகர் ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது: சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜபாட்டை. வருக வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார்.