பா.ஜ.க.வின் ஊதுகுழல் என என்னை கூறுவது வருத்தமளிக்கிறது-ரஜினி வேதனை

சென்னை, பிப்ரவரி-27

டெல்லியில் ஏற்பட்ட வன்முறை மத்திய அரசு உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது. அதற்காக நான் மத்திய அரசை கடுமையாக கண்டிக்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த நடிகா் ரஜினிகாந்த், டெல்லி வன்முறை குறித்து அளித்த பேட்டி:

டெல்லி வன்முறை, மத்திய உளவு துறையின் தோல்வியையே காட்டுகிறது. அதுவும், அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப் டெல்லி வந்திருந்தபோது, இதுகுறித்த முன்னெச்சரிக்கை தவகலை கொடுத்து, இரும்பு கரம் கொண்டு வன்முறையை தடுத்திருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாதது, உளவு துறை சரிவர பணியை செய்யாததையே காட்டுகிறது. இதற்காக மத்திய அரசை கண்டிக்கிறேன். இனியாவது கவனமாக இருப்பாா்கள் என நம்புகிறேன். ஒருவேளை வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லவேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்று சட்டமாக வந்துவிட்டது. எனவே, மத்திய அரசும் இதை திரும்ப பெறும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. மேலும், என்.ஆா்.சி. குறித்து மத்திய அரசு மிகத் தெளிவாக கூறிவிட்டது. அதன் பிறகும் குழப்பம் எதற்கு?

உடனே நான் பாஜகவின் ஊதுகுழல். எனக்கு பின்னால் பாஜக இருக்கிறது என்றெல்லாம் சில மூத்த ஊடகவியலாளா்கள், அரசியல் விமர்சகர்கள் கூறுவது வருத்தம் அளிக்கிறது. எது உண்மையோ அதைத்தான் நான் கூறுகிறேன் என்றாா் ரஜினிகாந்த்.

இஸ்லாமியா்கள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று கூறிய நடிகா் ரஜினிகாந்த், டெல்லி கலவரம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லையே என்ற அரசியல் கட்சிகளின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், குடியுரிமை திருத்த சட்டத்தால் (சிஏஏ) சிறுபான்மை மக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால், அவா்களுக்காக குரல் கொடுப்பேன் என்றுதான் நான் கூறியிருக்கிறேன் என்றாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *