அயோத்தி வழக்கில் இனிமேல் கால அவகாசம் கிடையாது
புதுடெல்லி, செப்டம்பர்-26
அயோத்தி வழக்கில் அக்டோபர் 18-க்கு பிறகுஒரு நாள் கூட அவகாசம் கிடையாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 6-ம் தேதி முதல் தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அக்டோபர் 18-ம் தேதிக்குள் வாதங்களை முடித்துக்கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த திங்கள் முதல் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில், அயோத்தி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொல்லியல் துறை அறிக்கை மீது ஆட்சேபம் தெரிவித்து, நீதிமன்ற நேரத்தை வீணடித்திருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என இஸ்லாமிய அமைப்புகள் தரப்பு தெரிவித்தது.

தொல்லியல் துறை அறிக்கை மீது கேள்வி கேட்கும் உரிமையை இஸ்லாமிய அமைப்புகள் தரப்பு வழக்கறிஞர் இழக்கவில்லை. ஆனால், நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் ஆதாரங்களை மதிப்பிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அயோத்தி வழக்கில் அக்டோபர் 18-ம் தேதிக்குள் வாதங்களை முடிக்க வேண்டும் என மீண்டும் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், அதற்கு பிறகு வாதங்களை முன்வைக்க ஒரு நாள் கூட அனுமதி வழங்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.