அ.தி.மு.க.வின் சிறப்புகளை மற்ற கட்சியினர் பேசுவது பெருமையாக உள்ளது-ஓ.பி.எஸ்.

தஞ்சை, பிப்ரவரி-26

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் இல்லத் திருமண விழா இன்று (பிப்.26) தஞ்சையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இந்தத் திருமண விழாவில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டனர். மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே.வாசன், பாஜகவின் மாநிலச் செயலாளர் கருப்பு முருகானந்தம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

திருமண விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: ஜெயலலிதாவின் ஆசியோடு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தின் உணவு தேவவையை நிறைவேற்றுவதில் டெல்டா மாவட்டங்கள் முக்கிய பங்கு ஆற்றுகிறது.

33 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் என்னுடைய மிகப்பெரிய சாதனையாக காவிரி நடுவர் இறுதி தீர்ப்பு அரசாணை பெற்று தந்ததே என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதனால் தான் காவிரி தாய் என்று ஜெயலலிதா அழைக்கப்படுகிறார்.

விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பல்வேறு நல்ல திட்டங்களை ஜெயலலிதா ஆசியோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார்.

ஹைட்ரோகார்பன் திட்டம் வருகிறதாமே என விவசாயிகள் அச்சபட்டனர். அவர்களின் அச்சத்தை போக்கி வாழ்க்கையில் ஒளி தீபம் ஏற்றும் வகையில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றினார். அ.தி.மு.க. ஆட்சியின் சிறப்புகளை நாம் சொல்வதை விட மற்ற கட்சியினர் சொல்லி வருவது பெருமை அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *