டெல்லியில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்ப வேண்டும்-கெஜ்ரிவால்

டெல்லி, பிப்ரவரி-26

டெல்லி வன்முறையை காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை ராணுவத்தை அனுப்ப வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டு கொண்டு உள்ளார்.

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து நடந்து வருகின்றன. டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.  இது வன்முறையாக மாறியது.

மூன்று தினங்களாக நடந்த இந்த வன்முறையில் டெல்லியில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்து உள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த வடகிழக்கு டெல்லி பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்புமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்து உள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: டெல்லி காவல்துறையால் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. நிலைமை ஆபத்தானதாக மாறி உள்ளது. காவல்துறை, அதன் அனைத்து முயற்சிகளையும் மீறி, நிலைமையை கட்டுப்படுத்தவும் நம்பிக்கையை வளர்க்கவும் முடியவில்லை.

டெல்லியில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை அனுப்ப வேண்டும்.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இது குறித்து உள்துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதி உள்ளேன் என கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *