பள்ளி மாணவிக்கு மது கொடுத்து கூட்டுபாலியல் வன்கொடுமை: திமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது

கிருஷ்ணகிரி, பிப்ரவரி-26

கிருஷ்ணகிரி அருகே 11-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து, கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திமுக இளைஞரணி ஒன்றிய செயலாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் மாணவி ஒருவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வாரம் பள்ளி முடித்து அந்த மாணவி வீட்டுக்கு செல்வதற்காக கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கு அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் வேப்பனஹள்ளி அடுத்த திம்மசந்திரம் கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவர் வந்துள்ளார். இருவரும் ஏற்கெனவே படித்த பள்ளியில் நண்பர்கள் என்பதால், சாதாரணமாக அவரிடம் பேசிகொண்டிருந்துள்ளார்.

அப்போது மது போதையில் மாணவரின் நண்பர்களான திமுக இளைஞரணி ஒன்றிய செயலாளர் ஜோடுகொத்தூர் பகுதியை சேர்ந்த ராஜா மற்றும் திம்மசந்திரம் கிராமத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் மஞ்சுநாத் வந்துள்ளனர். இருவரும் மது கலந்து வைத்திருந்த குளிர்பானத்தை மாணவியிடம் சாதாரண குளிர்பானம் என கொடுத்து பருக வைத்துள்ளனர்.

பின்னர் லேசாக மயங்கிய அந்த சிறுமியை கார் ஒன்றில் வைத்து அருகில் உள்ள வீடு ஒன்றிற்கு அழைத்து சென்று மூன்று பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மயக்கம் தெளிந்து மூன்று பேரிடம் இருந்து தப்பி வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 11-ம் வகுப்பு மாணவர் மற்றும் இளைஞர்கள் ராஜா, மஞ்சுநாத் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து 11-ம் வகுப்பு மாணவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் இந்த சம்பவம் திட்டமிட்ட பாலியல் பலாத்காரம் என்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். சக மாணவருடன் பேசிக்கொண்டிருந்த 11-ம் வகுப்பு மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *