ரஜினி எங்கு சென்றாலும் பாதுகாப்பு அளிக்கப்படும் : அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை. பிப்ரவரி.25
நடிகர் ரஜினி எங்கு சென்றாலும் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை தலைமை அலுவலகத்தில் கடல் மீன்பிடி அமலாக்கப் பிரிவிற்கு புதிததாக வாங்கப்பட்டுள்ள 19 வாகனங்களை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் காவல்துறை அதிகாரிகளிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடல் ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் ஆபத்து காலத்தில் மீனவர்களுக்கு உதவும் வகையில் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக துரைமுருகன் குற்றச்சாட்டு கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், பொய்யை உண்மையாக்க மீண்டும் மீண்டும் திமுக முயற்சிப்பதாக கூறினார்.
ரஜினி விசாரணை ஆணையத்தில் ஆஜராவது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, ஆணையத்தில் அரசின் தலையீடு ஏதும் இல்லை என்று கூறினார், தமிழகத்தில் ரஜினி எங்கு சென்றாலும் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.