இந்தியா- அமெரிக்கா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து
டெல்லி.பிப்ரவரி.25
இந்தியா- அமெரிக்கா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு, இன்று டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஐதராபாத் இல்லத்தில் டிரம்ப் – பிரதமர் மோடி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாட்டு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உடனும், பின்னர் இருவரும் தனித்தனியாகவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது இந்திய பயணம் இருநாடுகளுக்கும் பலன் தருவதாக அமைந்துள்ளது. இந்தியா அளித்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது, இந்திய மக்கள் வெளிப்படுத்திய அளப்பறிய அன்புக்கும் வரவேற்புக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா – அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.
இந்தியாவுக்கு வந்த எங்களுக்கு, இந்திய மக்கள் அளப்பறிய அன்பை வெளிப்படுத்தினர். எனது இந்திய வருகை 2 நாடுகளுக்கும் மிகுந்த பலனை அளிக்கக் கூடியதாக அமைந்திருந்தது. 5ஜி தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்தியா – அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவின் அப்பாச்சி, ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்துக்கு வழங்க ஒப்பந்தம் கையழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய – அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பு மேம்படும். உலகளாவிய அடிப்படைவாத இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக இருநாடுகளும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டதாக டிரம்ப் கூறினார்.