தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா அமெரிக்கா இணைந்து செயல்படும்: பிரதமர் மோடி
டெல்லி.பிப்ரவரி.25
தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு, இன்று டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஐதராபாத் இல்லத்தில் டிரம்ப் – பிரதமர் மோடி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாட்டு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உடனும், பின்னர் இருவரும் தனித்தனியாகவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்தினருடன் இந்தியாவிற்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். அதிபர் டிரம்புக்கு வராலாற்று சிறப்பு மிக்க வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அதிபர் டிரம்பும் நானும் கடந்த 8 மாதங்களில் ஐந்து முறை சந்தித்தோம். எங்கள் உறவை விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டு நிலைக்கு உயர்த்துகிறோம். உள்நாட்டுப் பாதுகாப்பில் எங்கள் ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறோம். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக போராடுவதற்கு தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் முயற்சிகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். டிரம்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உள்நாட்டு பாதுகாப்பு, வர்த்தகம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நடிவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இருநாட்டு ராணுவத்தினரும் கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள உள்ளவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்தார். இந்த பேச்சுவார்தை, இருநாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் அமைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.