தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நேரில் ஆஜராக ரஜினிக்கு விலக்கு

தூத்துக்குடி.பிப்ரவரி.25

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராவதிலிருந்து ரஜினிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில், 13 பேர் பலியாகினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

இந்த ஆணைய அதிகாரி மாதம்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, 18 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, 445 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2018 மே 30ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர், ‘மக்கள் 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நடந்த போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம், குடியிருப்பு எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சாமானிய மக்கள் கிடையாது. சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து உள்ளனர். இந்த புனிதமான போராட்டம் கூட ரத்தக்கறையுடன் முடிந்து உள்ளது’ எனக் குறிப்பிட்டார்.

இதனால் அவருக்கு ஒருநபர் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் 19வது கட்ட விசாரணை, தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில், ஆணையர் அருணாஜெகதீசன் தலைமையில் நேற்று துவங்கியது.

விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு கோரி ரஜினி விசாரணைஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார். படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டியுள்ளதால் தற்போது விசாரணைக்கு ஆஜராக முடியாத நிலை உள்ளதாக மனுவில் தெரிவித்திருந்தார்.

நேரில் ஆஜராவதில் விலக்கு கேட்ட ரஜினியின் கோரிக்கையை அருணாஜெகதீசன் ஆணையம் ஏற்றுக்  கொண்டதாக ரஜினிகாந்த் வழக்குரைர் இளம் பாரதி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *