காந்தி நினைவிட வளாகத்தில் மனைவியுடன் இணைந்து மரக்கன்று நட்ட டிரம்ப்
டெல்லி.பிப்ரவரி.25
இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகைக்கு சென்றார்.அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து டிரம்புக்கு முப்படைகளின் அணிவகுப்புடனும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட டிரம்பை கைக்குலுக்கி வரவேற்றார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.
இந்நிகழ்ச்சியின் போது. பிரதமர் மோடியும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் உடன் இருந்தனர். பின்னர் பின்னர் டெல்லி ராஜ்காட்டுக்கு சென்ற டிரம்ப், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதிபர் டிரம்புடன் அவரது மனைவி மெலானியாவும் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் இருவரும் காந்தி நினைவிடத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் தங்களது கருத்தைப் பதிவு செய்து கையெழுத்திட்டனர்.

மேலும் இருவரும் இணைந்து காந்தி நினைவிட வளாகத்தில் மரக்கன்று நட்டனர். இதையடுத்து டிரம்ப்புக்கு நினைவு பரிசாக காந்தி சிலை வழங்கப்பட்டது. இறையாண்மை கொண்ட வியத்தகு இந்தியாவுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.