தங்கம் விலை பவுனுக்கு ரூ.552 குறைவு

சென்னை.பிப்ரவரி.25

தங்கம்  விலை கிடுகிடு என உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.552 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

ஜனவரி முதல் வாரத்திலிருந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்தைத் தாண்டியது. இதற்கு அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்ட போா் பதற்றமே காரணம் என்று கூறப்பட்டது. எனினும்  பதற்றம் தணிந்த பின்னர், தங்கம் விலையும் குறைந்தது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தாலும், திருமண முகூர்த்த  தேதி உள்ளிட்ட காரணங்களால் பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் மீண்டும் ஏறுமுகமாகவே இருந்தது. 

நேற்று மேலும் உயர்ந்த தங்கத்தின் விலை, புதிய உச்சத்தைத் தொட்டது. சென்னையில் நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.752 உயா்ந்து, ரூ.33,328-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமையான இன்று 22 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.552 குறைந்து, ரூ.32,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.69 குறைந்து, ரூ.4,097-க்கு விற்பனையாகிறது.

அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.52.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ.52,700 ஆகவும் விற்கப்படுகிறது.