அமெரிக்க அதிபர் டிரம்புக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு

டெல்லி.பிப்ரவரி.25

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக  இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு, குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பும், அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

குஜராத் மாநிலம் அகமதாபாத், ஆக்ரா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெல்லி வந்தடைந்தார். இன்று காலையில் அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

குதிரைப்படையினர் புடை சூழ பீஸ்ட் காரில் அழைத்து வரப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவை, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அனைவரும் இணைந்து குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து இந்திய, அமெரிக்க நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. அதன் பின்னர் துப்பாக்கி குண்டுகள் முழங்க அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய அமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகள், உயர் அதிகாரிகள் டிரம்புக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். தொடர்ந்து அமெரிக்க குழுவினர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

அதன் பின்னர் ராஜ்காட் பகுதிக்கு சென்ற டிரம்ப் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *