காதல் சின்னம் தாஜ்மகாலை கண்டுகளித்த அதிபர் ட்ரம்ப்-மெலனியா தம்பதி

ஆக்ரா, பிப்ரவரி-24

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆக்ராவில் உள்ள ‘காதல் சின்னம்’ தாஜ்மகாலை மனைவி மெலனியா டிரம்ப்புடன் பார்வையிட்டார்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் மைதானத்தை திறந்துவைத்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அதன்பின்னர், ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிட அகமதாபாத்தில் இருந்து ஆக்ராவிற்கு புறப்பட்டார்.

ஆக்ரா விமான நிலையத்தில் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவை உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் 3000 நடனக்கலைஞர்கள் பங்கேற்ற மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து தாஜ்மகாலை காண சென்றார். 10 கி.மீ. தூர பயணத்தில் 31 ஆயிரம் பள்ளி மாணவர்கள் வரவேற்றனர்.

ஆண்டுக்கு 80 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் தாஜ்மகாலில் டிரம்ப் வருகையால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் மகள் இவாங்கா, மருமகன் ஜேரட் குஷ்னர் ஆகியோரும் தாஜ்மகாலை பார்வையிட்டனர்.

தாஜ்மகால் முன்பு நின்று அதிபர் டிரம்ப், மெலனியா தம்பதியும், இவாங்கா ட்ரம்ப் தம்பதியும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். தாஜ்மகாலின் நுழைவில் உள்ள பதிவேட்டில் டிரம்ப் மற்றும் மெலனியா தங்களது வருகையை பதிவு செய்தனர். அந்த பதிவேட்டில், ‘தாஜ்மகால் பிரமிப்பைத் தூண்டுகிறது, இந்திய கலாச்சாரத்தின் பணக்கார மற்றும் மாறுபட்ட அழகுக்கு காலமற்ற சான்று! நன்றி, இந்தியா,’ என எழுதி கையொப்பமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *