ஸ்டாலின் கனவு ஒருநாளும் பலிக்காது…2021-ல் அதிமுக தான் ஆட்சிக்கு வரும்-முதல்வர் பழனிசாமி

கோவை, பிப்ரவரி-24

ஸ்டாலின் தொடர்ந்து முதலமைச்சர் கனவில் தான் இருக்கிறார். அடுத்த முறையும் அதிமுக தான் ஆட்சிக்கு வரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பெண்கள் அச்சமின்றி, இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வகையில் தமிழகம் பாதுகாப்பாக உள்ளது. கோவை மற்றும் சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களாக உள்ளது. பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

போராட்டத்துக்கு அதிமுக அரசு எந்தவித கட்டுப்பாடும் விதிக்காது. இந்தியாவிலே தமிழகத்தில் தான் எல்லா விதமான போராட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன. ஊடகங்கள் குறித்து இழிவாக பேசிய திமுக பிரமுகர் ஆர்.எஸ்.பாரதிக்கு ஊடகங்கள் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

தமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் அச்சப்பட தேவையில்லை. திட்டமிட்டு அரசியல் லாபத்திற்காக இஸ்லாமிய மக்கள் தூண்டப்பட்டு போராட்டத்தை நடத்த வைக்கிறார்கள். அவர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துகிறார்கள். மத்தியில் திமுக அங்கம் வகித்தபோது தான் என்பிஆர் கொண்டுவரப்பட்டது. என்பிஆர் சட்டத்தை முதலில் ஆதரித்தது திமுக தான். அதில் 3 அம்சங்கள் இப்போது மாற்றப்பட்டு உள்ளது. 

7 பேர் விடுதலையில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளோம். 7 பேர் விடுதலையில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். 7 பேர் விடுதலை குறித்து திமுக எல்லா இடங்களிலும் பேசுகின்றது. ஆனால், நளினியை மட்டும் விடுதலை செய்தால் போதும் என்று சொன்னது திமுக. 7 பேர் விடுதலை குறித்து பேச திமுகவிற்கு அருகதை இல்லை.

விவசாயிகளின் நலன் கருதியும், பருவமழையை சேமிக்கவுமே குடிமராத்துப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. மக்களிடையே வெற்றி திட்டமாக உள்ளது. விவசாயிகளுக்கு ஏற்ற திட்டங்களை கொண்டு வருவதால் டிடிவி தினகரன், மு.க.ஸ்டாலின் ஆகியோரால் பொறுத்து கொள்ள முடியவில்லை.

திமுக ஆட்சியில் இருந்த போது ரூ.1 லடசம் கடன் என்றால். இன்றைய விலைவாசியை பார்க்க வேண்டும். திமுக வாங்கிய கடனுக்கும் சேர்த்து வட்டி கட்டி வருகிறோம். கடனும், வட்டியும் அதிகரித்து உள்ளது. திமுக ரூ.1 லட்சம் கோடி கடன் வைத்து இருந்தபோது வெள்ளை அறிக்கை விட்டார்களா?.

ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சிகள் இருப்பதால் டிரம்ப் நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை. ஸ்டாலின் தொடர்ந்து முதலமைச்சர் கனவில்தான் இருக்கிறார். அடுத்த முறையும் அதிமுக தான் ஆட்சிக்கு வரும். நல்ல திட்டங்கள் அமல்படுத்தப்படுவதால் ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *