இந்தியாவின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்களை வழங்க உள்ளோம்-அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அகமதாபாத், பிப்ரவரி-24

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்புடன் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அகமதாபாத் விமான நிலையம் வந்திறங்கிய டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப்பை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். டிரம்ப் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் சமர்பதி ஆசிரமம் சென்று அங்கு சுற்றிப் பார்த்தனர். காந்தியடிகளின் ராட்டையை மனைவியோடு சேர்ந்து சுற்றி மகிழ்ந்தார் டிரம்ப்.  

பின்னர் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிக்கு மோடி, அதிபர் ட்ரம்ப் மற்றும் மெலானியா ட்ரம்ப் வந்தனர். அவர்கள் வந்த வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்பு அளித்தனர். 

சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதாவது: நமஸ்தே. இந்திய மக்களை அமெரிக்கா விரும்புகிறது. இந்திய மக்களை அமெரிக்கா மதிக்கிறது. இந்திய மக்களுக்கு ஒன்று கூற 8000 கிமீ பயணித்து வந்துள்ளோம். அமெரிக்கா எப்போதுமே இந்தியாவின் நம்பகமான கூட்டாளியாக இருக்கும்.

எங்களை வரவேற்க இந்த மைதானத்தில் 1.25 லட்சம் பேர் கூடியுள்ளனர். இந்தியா எங்களுக்கு வழங்கிய விருந்தோம்பலை எப்போதும் மறக்க முடியாது. அமெரிக்கர்களின் மனதில் இன்று முதல் இந்தியா சிறப்பான இடம் பிடித்துவிட்டது

டீ விற்பனையாளராக இருந்து நாட்டின் தலைவராகியுள்ளார் மோடி. மோடியை அனைவரும் விரும்புவார்கள் என்பது எனக்கு தெரியும். மோடியை அவ்வளவு சீக்கிரமாக கணிக்க முடியாது, அவர் கடினமானவர். இந்திய மக்களுக்காக இரவு, பகலாக மோடி உழைத்து வருகிறார். இந்தியாவின் ஜனநாயகம் ஆச்சரியப்பட வைக்கும் வகையை சேர்ந்தது.

இந்திய வரலாற்றில் மோடி தலைமையில் அனைத்து கிராமங்களும் மின் வசதியை பெற்றுள்ளது. இந்தியா ஒரு பொருளதார சக்தியாக உலக அரங்கில் உருவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து ஏழ்மை விரட்டி அடிக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரமான ஜனநாயக நாடாக திகழ்ந்து வருகிறது. மோடி தலைமையில் இந்தியா உலக அரங்கில் முன்னணி நாடாகியுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி மற்ற நாடுகளுக்கு ஒரு உதாரணம். இந்தி சினிமாக்கள் மிகவும் கற்பனைத்தன்மையுடன் எடுக்கப்படுகின்றன. கலாச்சாரம் மற்றும் வர்த்தகத்தில் இந்தியா – அமெரிக்கா தனிச்சிறப்பு நாடுகள். விராட் கோலி உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். இந்தி சினிமாத்துறை உலக அரங்கில் செழிப்பான ஒன்றாக உள்ளது. உலகம் முழுவதும் இந்தி சினிமாக்கள் விரும்பி பார்க்கப்படுகின்றன

இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என பல மதத்தினர் ஒற்றுமையாக வசிக்கின்றனர். இந்திய மக்களின் ஒற்றுமை அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க கூடியது. மகாத்மா காந்தி ஆசிரமத்திற்கு சென்று வந்ததை பெருமையாக கருதுகிறோம். அமெரிக்க வளர்சிக்கு பங்களிப்பு அளித்து வரும் இந்திய வம்சாவழியினருக்கு நன்றி. இருநாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து பேச உள்ளேன்.

3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாகிறது. தனிச்சிறப்பு வாய்ந்த ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்திற்கு விற்க உள்ளோம். அமெரிக்காவின் மிக முக்கியமான ராணுவ கூட்டாளியாக இந்தியா இருக்க வேண்டும். இந்தியா-அமெரிக்கா நாடுகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு வந்துக் கொண்டிருக்கிறோம். ஐஎஸ்ஐஎஸ் தலைவன் பாக்தாதியை அமெரிக்கா அழித்துவிட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே அமெரிக்கா வருவதற்கு கட்டுப்பாடுகள் அதிகம். தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா-அமெரிக்கா இணைந்து செயல்படும்.

பாக்., எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மிகச்சிறப்பான வர்த்தக ஒப்பந்தம் இந்தியா-அமெரிக்கா இடையே கையெழுத்தாக உள்ளது.இந்தியா-அமெரிக்காவுக்கு நன்மை தரும் வகையில் வர்த்தக ஒப்பந்தம் இருக்கும். அமெரிக்காவின் வளர்ச்சியில் பங்களிக்கும் குஜராத்தியர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்தியர்கள் தாங்கள் நினைத்ததை எப்படியும் அடைந்துவிடுவார்கள்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகம் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு மிகச்சிறந்த சந்தையாக இந்தியா உள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டங்கள் மிகச்சிறப்பு வாய்ந்தவை. இந்தியா மிகவும் செழுமையான தேசமாக திகழ்கிறது. ஒளிமயமான எதிர்காலத்திற்கு மக்கள் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இவ்வாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *