காலாண்டு லீவுக்கு பின் புக்ஸ் கிடைக்குமா?
செப்டம்பர்-26
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ள நிலையில், பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக அரசின் பாடநூல் கழகமே புத்தகம் அச்சடித்து விநியோகித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு அந்த கழகம் 4.72 கோடி புத்தகங்கள் அச்சிட்டது. இந்த நிலையில், காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியின் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், 6 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு இரண்டாம் பருவத்திற்கான புத்தகங்கள் சென்றடையவில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும், புத்தகம் இல்லாமல் மாணவ, மாணவிகள் படிப்பது மிகவும் கடினம் என்றும், தாங்களுக்கே புத்தகத்தில் என்ன விஷயங்கள் இடம்பெறும் என குழப்பத்தில் இருப்பதாகவும் அரசு பள்ளி ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முதல் பருவத்திலேயே ஒரு சில பள்ளிகளில் காலாண்டு தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் புத்தகங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் தலையிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.