இந்திய மக்களின் ஒற்றுமை அனைவருக்கும் முன்மாதிரி-அதிபர் ட்ரம்ப்
அகமதாபாத், பிப்ரவரி-24
இந்திய மக்களின் ஒற்றுமை அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அகமதாபாத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பேசினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்புடன் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அகமதாபாத் விமான நிலையம் வந்திறங்கிய டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்பை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். டிரம்ப் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் சமர்பதி ஆசிரமம் சென்று அங்கு சுற்றிப் பார்த்தனர். காந்தியடிகளின் ராட்டையை மனைவியோடு சேர்ந்து சுற்றி டிரம்ப் மகிழ்ந்தார்.

பின்னர் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிக்கு மோடி, அதிபர் ட்ரம்ப் மற்றும் மெலானியா ட்ரம்ப் வந்தனர். அவர்கள் வந்த வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்பு அளித்தனர்.
சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதாவது: நமஸ்தே. இந்திய மக்களை அமெரிக்கா விரும்புகிறது. இந்திய மக்களை அமெரிக்கா மதிக்கிறது. இந்திய மக்களுக்கு ஒன்று கூற 8000 கிமீ பயணித்து வந்துள்ளோம்.

டீ விற்பனையாளராக இருந்து நாட்டின் தலைவராகியுள்ளார் மோடி. மோடியை அனைவரும் விரும்புவார்கள் என்பது எனக்கு தெரியும். மோடியை அவ்வளவு சீக்கிரமாக கணிக்க முடியாது, அவர் கடினமானவர். இந்திய மக்களுக்காக இரவு, பகலாக மோடி உழைத்து வருகிறார். இந்தியாவின் ஜனநாயகம் ஆச்சரியப்பட வைக்கும் வகையை சேர்ந்தது.
இந்திய வரலாற்றில் மோடி தலைமையில் அனைத்து கிராமங்களும் மின் வசதியை பெற்றுள்ளது. இந்தியா ஒரு பொருளதார சக்தியாக உலக அரங்கில் உருவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து ஏழ்மை விரட்டி அடிக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரமான ஜனநாயக நாடாக திகழ்ந்து வருகிறது. மோடி தலைமையில் இந்தியா உலக அரங்கில் முன்னணி நாடாகியுள்ளது.
இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என பல மதத்தினர் ஒற்றுமையாக வசிக்கின்றனர். இந்திய மக்களின் ஒற்றுமை அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க கூடியது. மகாத்மா காந்தி ஆசிரமத்திற்கு சென்று வந்ததை பெருமையாக கருதுகிறோம். அமெரிக்க வளர்சிக்கு பங்களிப்பு அளித்து வரும் இந்திய வம்சாவழியினருக்கு நன்றி. இருநாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து பேச உள்ளேன்.