ஆலந்தலையில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் கட்டப்படும்-முதல்வர் பழனிசாமி

திருச்செந்தூர், பிப்ரவரி-22

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தை திறந்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணி மண்டபத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் வெள்ளமே பா.சிவந்தி ஆதித்தனாரின் சாதனைக்கு சாட்சி. இயற்கையே மழை பொழிந்து சிவந்தி ஆதித்தனாரை வாழ்த்துகிறது

எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய போது திருச்சியில் சி.பா.ஆதித்தனார் பெயரில் முதல் சத்துணவு கூடத்தை கட்டி கொடுத்தவர் சிவந்தி ஆதித்தனார். சரியான நபரிடம் ஆதித்தனார் பொறுப்பை கொடுத்திடுக்கிறார் என அண்ணா கூறினார். கிராம மக்களையும் வார இதழ் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் பா.சிவந்தி ஆதித்தனார்.

இளைஞர்கள் படிக்கும் போது தான் நாடு வளர்ச்சி அடையும் என வலுவான நம்பிக்கை கொண்டிருந்தார். பா.சிவந்தி ஆதித்தனாரை சென்னை மாநகர ஷெரீப்-ஆக நியமித்து அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர்.

தாத்தா, தந்தை வழியில் சிறந்த நிர்வாகியாக திகழ்கிறார் பாலசுப்பிரமணியன் ஆதித்தன். பா.சிவந்தி ஆதித்தனார் குடும்பத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகளின் விபரம்:-

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், ஆலந்தலையில் 52 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் (தூண்டில் வளைவு) கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.

தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீரை வறட்சி பகுதிகளுக்கு திருப்பி பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தாமிரபரணி, கருமேனியாறு நம்பியாறு இணைப்பு திட்டத்தின் நிலைக்கான பணிகள் விரைவில் துவங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராம விவசாய நிலங்கள் பாசன உறுதி பெறும்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், அமராபுரம் கிராமத்தில் கருமேனியாற்றின் குறுக்கே 3 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை கட்டப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்திற்கு 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டத்திற்கு 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்திற்கு 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்படும். அங்கு பால் பண்ணை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

கடம்பூர் பேரூராட்சி, விளாத்திகுளம் பேரூராட்சி, புதூர் பேரூராட்சி மற்றும் 180 கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகள் 10 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

சாத்தான்குளம் மற்றும் திருவைகுண்டம் பேரூராட்சி சந்தைகள் தலா 1 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திருச்செந்தூர் பேரூராட்சி சந்தை 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், உடன்குடி பேரூராட்சி சந்தை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும்.

ஆழ்வார்திருநகரி குடிநீர் மேம்பாட்டு பணிகள் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாசரேத் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பெருங்குளம் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் நிறைவேற்றப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *