கடலூர், நாகையில் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!!!

சென்னை, பிப்ரவரி-22

கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயன பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக்க சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து 2017ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57,500 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, அவற்றில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயன பொருகள் முதலீட்டு மண்டலம் (Petrolium, Chemicals and Petrochemicals Investment Region -PCPIR) அமைப்பதற்கு 2017ம் ஆண்டு ஜூலை 19-ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதனிடையே காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சில வட்டாரங்கள் மட்டுமே வேளாண் மண்டலம் என்ற வரையறையின் கீழ் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், வேளாண்மை சாராத தொழில்கள், குறிப்பாக துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலை, ஒருங்கிணைந்த எக்கு ஆலை அல்லது இலகு இரும்பு ஆலை, செம்பு உருக்காலை, அலுமினியம் உருக்காலை, எண்ணெய் மற்றும் நிலக்கரிப்படுகை, மீத்தேன் ஆலைகள், பாறைப் படிம எரிவாயு, ஹைட்ரோகார்பன் வாயு எடுத்தல், வாயுக்களின் ஆய்வுகள், துளைத்தெடுத்தல் மற்றும் பிரித்தெடுத்தல் உள்ளிட்ட ஆய்வுகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயன ஆலை முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *