சிஏஏ இந்தியர்களுக்கு எதிரானது அல்ல, மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்-வெங்கையா நாயுடு

கோவை, பிப்ரவரி-21

குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) இந்தியர்களுக்கு எதிரானது இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

கோவை வந்த குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியில், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது வெங்கையா நாயுடு பேசியதாவது: நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் 100 % கல்வியறிவு பெற முடியவில்லை. குடியுரிமை திருத்த சட்டம் இந்திய மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த சட்டம், இந்திய குடியுரிமையை எதுவும் செய்யாது.

அண்டை நாடுகளில், மதரீதியாக துன்புறுத்தப்படுபவர்களுக்காக கொண்டு வரப்பட்டது. சட்டத்தை முதலில் படித்து, புரிந்து கொண்டு அடுத்து என்ன செய்வது என்பதை முடிவு செய்யுங்கள். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தற்காலிகமாக தான் வழங்கப்பட்டது. அந்த மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில், அன்னிய நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது.

தாய், தாய்நாடு, தாய்மொழி ஆகியவற்றை ஒரு போதும் மறக்கக் கூடாது. வீடுகளில் தாய்மொழியில் மட்டும் பேசுங்கள். வெளிநாட்டு மொழியில் ஏன் பேச வேண்டும். அம்மா என்ற அழகான வார்த்தை இருக்க, எதற்காக ‘மம்மி, டாடி’ என்று குழந்தைகளை பெற்றோர்கள் அழைக்க சொல்ல வேண்டும். எத்தனை மொழி கற்றாலும் தாய்மொழியை மட்டும் மறந்துவிடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *