அடிபணிந்த அண்ணா பல்கலைக்கழகம்… நடந்தது என்ன?
சென்னை, செப்டம்பர்-26
கட்டாய பாடமாக இருக்கும் சமஸ்கிருதம் மற்றும் பகவத்கீதையை உள்ளடக்கிய தத்துவவியல் பாடத்திட்டம் விருப்ப பாடமாக மாற்றியமைக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தார் சூரப்பா தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் பயிலும் முதுநிலை மற்றும் இளநிலை பொறியியல் மாணவர்களுக்கு தத்துவவியல் பாடத்திட்டம் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுமத்தின் அறிவுறுத்தலின்படி நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படுவதாக கூறப்பட்டது. இந்த தத்துவவியல் பாடத்திட்டத்தில் சமஸ்கிருதம் உள்பட பகவத் கீதை தொடர்பான பாடங்களும் இடம்பெற்று இருந்தன. மேலும் அதை மாணவ-மாணவிகள் கட்டாயம் படிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் பொறியியல் படிப்புக்கான வேலைவாய்ப்பு குறைந்துவரும் நிலையில், அதற்கான காரணத்தை கண்டறிந்து நவீன முறையில் பாடத்திட்டத்தை மேம்படுத்துவதே சிறந்தது என்றும் கல்வியாளர்கள் கருத்தும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா விளக்கமளித்துள்ளார். சமஸ்கிருதம் மற்றும் பகவத் கீதையை உள்ளடக்கிய தத்துவவியல் பாடம் கட்டாய பாடத்திலிருந்து விருப்ப பாடமாக மாற்றப்படும். விருப்பம் உள்ள மாணவர்கள் அந்த பாடத்தை தேர்வு செய்து படிக்கலாம். இல்லாதவர்கள் பட்டியலில் உள்ள மொத்த 12 பாடங்களில் தங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒரு பாடத்தை தேர்வு செய்து படித்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.