அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, வினா-விடை புத்தகம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
கோவை, பிப்ரவரி-21
கோவை குனியமுத்தூர் அரசு பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி மற்றும் 10-வகுப்புக்கான வினா-விடை தாள் ஆகியவற்றை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
கோவையில் குனியமுத்தூர் அரசு பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, மற்றும் 10-வகுப்புக்கான வினா-விடை தாள் ஆகியவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் குனியமுத்தூர், குளத்துப்பாளையம், சுண்டக்கமுத்தூர் அரசு பள்ளிகளை சேர்ந்த 10, 12-ம் வகுப்பு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மூன்று அரசு பள்ளியை சேர்ந்த 391 பேருக்கு 15 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. மேலும் 600 மாணவ-மாணவிகளுக்கு பத்தாம் வகுப்புக்கான வினா-விடை புத்தகங்கள் வழங்கினார். அமைச்சரின் சொந்த முயற்சியில் இந்த வினா-விடை புத்தகம் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
நிகழ்ச்சியின் மேடையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது: கோவையில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெறவுள்ளது. கோவை சேர்ந்த மாடுகளும் போட்டியில் கலந்து கொள்கின்றன. மேலும் மாணவ, மாணவிகளுக்கு கொடுக்கப்பட்ட புத்தகங்கள் துறை சார்ந்த வல்லுனர்கள் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் தயாரிக்க 5 மாத காலம் ஆகிறது.

இந்த புத்தகத்தில் 90 % மதிப்பெண் வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பெற்றோர்கள் சிரமத்தை மனதில் வைத்து மாணவர்கள் படிக்க வேண்டும். படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும். நான் அரசு பள்ளியில் படித்து வளர்ந்தவன் தான். விளையாட்டு போட்டிகளில் அதிகம் கவனம் செலுத்துங்கள்.

அரசு சார்பில் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றோம். அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 14 விலையில்லா பொருட்களை வழங்கி வருகிறோம். மேலும் கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான வேலை நடந்து வருகிறது. மேலும் அதிமுக அரசு கல்வித்துறையில் தொடர்ந்து அதிகமான நிதி ஒதுக்கி வருகிறது. இந்த முறைகூட ரூ.34,000 கோடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியுள்ளார் என தெரிவித்தார்.