வெலிங்டன் டெஸ்ட்: 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா… மழையால் ஆட்டம் நிறுத்தம்

வெலிங்டன், பிப்ரவரி-21

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி டாப் ஆர்டர் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், மழையால் இன்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டது.

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் களம் இறங்கினர். ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை சந்தித்தது இந்திய அணி. பிரித்வி ஷா 16 ரன்களில் வெளியேறினார். நட்சத்திர வீரரும் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி 2 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.  

இந்திய அணி உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்திருந்தது. மயங்க் அகர்வால் 29 ரன்களிலும், ரகானே 2 ரன்களிலும் களத்தில் இருந்தனர். அதன்பின்னர் தொடர்ந்து ஆடிய அகர்வால், 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ரகானே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட்டை காப்பாற்ற போராடினார். மறுமுனையில் விகாரி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரகானேவுடன், ரிஷப் பன்ட் இணைந்தார். 

தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 38 ரன்களுடனும், ரிஷப் பன்ட் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தேநீர் இடைவேளையின்போது மீண்டும் மழை பெய்ததால் போட்டியை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெறும்.