படம் திரையிட்டு 8 வாரங்களுக்கு பிறகே ஆன்லைனில் வெளியிடவேண்டும்-டி.ராஜேந்தர்

சென்னை, பிப்ரவரி-21

புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்கு பின்னரே டிஜிட்டல் தளங்களில் வெளியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள அச்சங்கத்தின் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்துடன் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்களை விவரித்தார்.  

அப்போது அவர் கூறியதாவது: 12% ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து கேளிக்கை வரி 8% செலுத்துவது திரையரங்கு உரிமையாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக உள்ளது. ஆகையால் 8% கேளிக்கை வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

தர்பார் பட விவகாரத்தில் திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் தார்மீக அடிப்படையில் தர்பார் பட தயாரிப்பு நிறுவனம், நடிகர், இயக்குநரிடம் பேசி சுமூக தீர்வு காணவேண்டும்.

பாலிவுட்டில் பின்பற்றப்படுவது போல், தமிழகத்திலும் ஒரு திரைப்படம் வெளியாகி 8 வார காலத்திற்கு டிஜிட்டல் தளத்தில் படம் வெளியிடக்கூடாது.

புதிய திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் வரை எந்த சாட்டிலைட் சேனல்களிலும் அந்த திரைப்படத்தை ஒளிபரப்பக்கூடாது. உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *