மோடி, அமித்ஷாவின் செல்வாக்கு இனி எடுபடாது-ஆர்.எஸ்.எஸ். அதிருப்தி

டெல்லி, பிப்ரவரி-21

டெல்லியில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. பா.ஜ.க.வுக்கு 7 இடங்கள் மட்டுமே கிடைத்தது. மோடி மற்றும் அமித்ஷாவின் அரசியல் வியூகம் டெல்லி தேர்தலில் கைகொடுக்கவில்லை.

மோடி மற்றும் அமித்ஷாவின் செல்வாக்கு குறைந்து விட்டது என அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்த நிலையில், டெல்லி தேர்தலில் பா.ஜ.க. தோல்வி குறித்து ஆர்.எஸ்.எஸ். –ன் அதிகாரப்பூர்வ நாளேட்டில் பகுப்பாய்வு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த செய்தியில், ”தொடர்ந்து டெல்லியில் இரண்டாவது முறை பாஜக தோல்வி அடைந்துள்ளது. 2015-க்கு பின்னர் அடிமட்ட அளவில் தன்னை வளர்த்து கொள்ள, புதுப்பித்து கொள்ள பாஜக தவறியுள்ளது. மேலும் டெல்லியில் இறுதி கட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. அடித்தட்டு மக்களின் தேவைகளை அறிந்து கொள்ள தவறியது ஆகியவை தோல்விக்கு காரணங்களாக அமைந்துள்ளது.

இதிலிருந்து இனிமேல் சட்டமன்ற தேர்தல்களில் மோடி, அமித்ஷாவின் செல்வாக்கு அனைத்து தருணங்களிலும் கை கொடுக்காது, உதவாது என்பது தெளிவாகிறது. ஆனால், தற்போதைக்கு வேறு வழியில்லை. டெல்லி மக்களின் தேவைகளை அறிந்து பாஜகவின் செல்வாக்கை உயர்த்த மறுகட்டமைப்பு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் ”டெல்லியில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டு இருக்கும் 1700 குடியிருப்புகளை சட்டபூர்வமாக்கி, 40 லட்சம் மக்கள் நிம்மதியாக வாழ வழி ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையும் மீறி ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *