சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு இல்லாதது அவமானம் -கமல்
சென்னை, பிப்ரவரி-20
இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ராட்சத கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு உதவி இயக்குநர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள 3 பேரின் உடல்களுக்கு கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்திய பின் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியன் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து என் குடும்பத்தில் நிகழ்ந்ததாக கருதுகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியன்-2 படபிடிப்பில் இணைந்த கிருஷ்ணா இன்று உயிருடன் இல்லை.
நான் நூலிழையில் உயிர் பிழைத்தேன். 4 நொடிகளுக்கு முன்புவரை நான் அங்குதான் இருந்தேன். இந்தியன் -2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும்.
100 கோடி, 200 கோடி என மார்த்தட்டிக்கொள்ளும் நாம் கடைநிலை ஊழியனுக்கும் பாதுகாப்பு தர முடியவில்லை. சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு கூட காப்பீடு இருக்க வேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும்.
சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கும் பாதுகாப்பு இல்லாதது அவமானமாகும். இது போன்ற விபத்து இனி நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நேரம் இது. சினிமா துறையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.