சிறப்பு வேளாண் மண்டல சட்ட மசோதா: முதல்வர்-ஸ்டாலின் இடையே காரசார விவாதம்

சென்னை, பிப்ரவரி-20

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், திருச்சி, கரூர் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்ற வகை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவையில் மசோதா மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் இருந்து திருச்சி, கரூர், அரியலூர் விடுபட்டிருப்பது ஏன்?. மேலும், வேளாண் நிலங்களில் ரியல் எஸ்டேட் போடப்படுவது ஏன் தடுக்கப்படவில்லை.

நடைமுறையில் உள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்யவேண்டும். சட்ட முன்வடிவை தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.  

இதற்கு முதலமைச்சர் பழனிசாமி பதிலளிக்கையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை ரத்து செய்வதில் சட்ட சிக்கல் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கக்கோரி மத்திய அமைச்சரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து குறுகிய காலத்தில் இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளோம்.

அறிவிக்கப்பட்ட 10 நாட்களில் சட்டமுன்வடிவை கொண்டுவந்துள்ளோம். திருச்சி தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால், அதை வேளாண் மண்டலத்திற்குள் கொண்டுவரவில்லை.

கரூர், அரியலூர், திருச்சி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகள் வேளாண் மண்டலத்திற்குள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றவேண்டும். தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பிரதிநிதிகளாக குழுவில் இடம்பெறுவார்கள். இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *