பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்: சட்டசபையில் மசோதா நிறைவேறியது

சென்னை, பிப்ரவரி-20

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பான சட்ட மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், திருச்சி, கரூர் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், இன்று (பிப்.20) சட்டப்பேரவை கூட்டத்தொடரில், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட மசோதாவை முதல்வர் தாக்கல் செய்து பேசினார்.

அப்போது, இந்த அறிவிப்பை வெளியிட்டதற்கு தான் ஒரு விவசாயியாக மகிழ்ச்சியடைவதாகவும், இத்தருணத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நினைவுகூர்வதாகவும் தெரிவித்தார்.

மசோதா மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் இருந்து திருச்சி, கரூர், அரியலூர் விடுபட்டிருப்பது ஏன்?. மேலும், வேளாண் நிலங்களில் ரியல் எஸ்டேட் போடப்படுவது ஏன் தடுக்கப்படவில்லை. ஏற்கனவே உள்ள திட்டங்கள் பாதிக்கப்படாது என்று சட்டத்தில் உள்ளது. நடைமுறையில் உள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்யவேண்டும். சட்ட முன்வடிவை தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனையடுத்து, நடைமுறையில் உள்ள திட்டங்களை ரத்து செய்தால் சட்டசிக்கல் ஏற்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இதனையடுத்து, வேளாண் மண்டல அறிவிப்பை திமுக வரவேற்கிறது என்று கூறிய ஸ்டாலின், தேர்வு குழுவுக்கு அனுப்பினல் முழுமையாக வெற்றியடையும் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *