யாருக்கு அஞ்சி வக்காலத்து வாங்குகிறீர்கள்?-ஸ்டாலின்

சென்னை, பிப்ரவரி-20

சிஏஏ, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவராமல் யாருக்காக வக்காலத்து வாங்குகிறீர்கள் என முதல்வர் பழனிசாமியிடம், திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வியெழுப்பினார்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடபெற்று வரும் நிலையில், நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் மற்றும் சிஏஏ, என்.பி.ஆர். குறித்து கேள்வியெழுப்பினார்.

ஸ்டாலின் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டசபை கூட்டத் தொடரில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இன்றைய கூட்டத்தொடரில் இரு பிரச்னைகளை எழுப்பினேன். முதலாவதாக 11 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

இதனால், உடனடியாக சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என குரல் எழுப்பினேன். அது குறித்து பேச அனுமதி வழங்கவில்லை, நான் பேசியதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டனர்.

அடுத்ததாக, குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவை குறித்து கேட்டேன். தமிழகம் தவிர்த்து பல்வேறு மாநிலங்களில் சிஏஏ.வை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். தமிழகத்தில் அதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற மறுக்கின்றனர்.

இனி வரவிருக்கும் என்.பி.ஆர்., மட்டுமாவது தடுத்து நிறுத்துங்கள் என கூறினேன். உடனே முதல்வரும் வருவாய்த்துறை அமைச்சரும் பிரசாரத்தில் பேசுவது போல், பேசுகின்றனர்.

ஓட்டுவங்கிக்காக தான் இப்படி பேசுகிறீர்கள் என எங்களை பார்த்து சொல்கின்றனர். அப்படியானால், நீங்கள் யாருக்காக வக்காலத்து வாங்குகிறீர்கள்? எதற்காக தீர்மானம் கொண்டுவருவதில்லை?. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *