கோவை ஜல்லிக்கட்டு: 900 காளைகளும், 600 காளையர்களும் களமிறங்குவார்கள்- E.A.P. அன்பரசன்

கோவை, பிப்ரவரி-20

கோவையில் வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 900 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பார்கள் என கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்க தலைவர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், செட்டிப்பாளையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக, மைதானம் தயார்படுத்துதல், கேலரி அமைத்தல் போன்ற முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகளை கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்க தலைவர் அன்பரசன், தமிழ்நாடு ரேக்ளா பேரவை தலைவர் அர்ஜூனன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அதன்பின் கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்க தலைவர் E.A.P. அன்பரசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கோவை ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் மூன்றாமாண்டு ஜல்லிக்கட்டு போட்டி 23-ம் தேதி காலை 7 முதல் மாலை 5 மணி வரை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற உள்ளது.

தமிழகத்திலேயே மிகப்பெரிய கேலரி அமைத்து மக்களுக்கு தீங்கு இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசிக்க சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

மக்களுக்கு தண்ணீர், உணவு, பேருந்து வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாட்டு மாட்டு காளை கண்காட்சி, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 750 முதல் 900 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் போட்டியில் கலந்து கொள்வார்கள்.

ஜல்லிக்கட்டு நடத்தப்படும் மற்ற மாவட்டங்களை விட கூடுதல் பரிசு பொருட்கள் வழங்க உள்ளோம். போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து வீரர்களுக்கும், காளைகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு இதுவரை 4150 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வளர்க்கப்பட்ட 300 காளைகள் களமிறங்குகின்றன. அடுத்த ஆண்டு முதல் கோவை காளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

கடந்த ஆண்டு 50 முதல் 1 லட்சம் பார்வையாளர்கள் வரை பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு 3 லட்சம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு கேலரியில் 8 ஆயிரம் பேர் வரை அமர்ந்து போட்டியை காணலாம்.

முதல் பரிசாக மாருதி ஆல்டோ கார், இரண்டாம் பரிசாக மோட்டார் பைக், மூன்றாம் பரிசு ஸ்கூட்டர் வழங்கப்படும். சிறந்த காளைக்கு நாட்டு மாடு சிறப்பு பரிசாக வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடு பிடி வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் முதல் முறையாக இன்சூரஸ் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *