இந்தியன் -2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து-3 பேர் பலி

சென்னை, பிப்ரவரி-20

சென்னை அருகே நடைபெற்று வரும் இந்தியன்-2 படப்பிடிப்பில் ராட்சத கிரேன் சாய்ந்ததில் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

செம்பரம்பாக்கத்திலுள்ள ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. அப்போது படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்டு கொண்டிருந்த ராட்சத கிரேன் எதிர்பாராதவிதமாக சாய்ந்து விழுந்தது.

இதில் கிருஷ்ணா என்ற உதவி இயக்குனர், படப்பிடிப்பில் உதவியாளர்களாக பணியாற்றி வந்த மது, சந்திரன் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன.

10 பேர் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மருத்துவமனைக்கு சென்ற நடிகர் கமல், காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து தனது டிவிட்டர் பதிவில், “எத்தனையோ விபத்துகளை சந்தித்து கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது” என்றும் மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே இந்த விபத்து தொடர்பாக கிரேன் ஆப்ரேட்டர் ராஜன் மீது 3 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் லைக்கா நிறுவனம் படப்பிடிப்பு தளத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும் இணை இயக்குனர் பரத்குமார் சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *