பொருளாதாரச் சரிவை நிர்மலா சீதாராமன் ஒப்புக்கொள்ள வேண்டும் – டாக்டர் ராமதாஸ்

சென்னை ஆக 24

பொருளாதாரச் சரிவை ஒப்புக்கொண்டு அதனை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்திய பொருளாதாரமும், சந்தைகளும் மந்தநிலையை எதிர்கொண்டு வரும் நிலையில், அவற்றை சமாளிப்பதற்கான சில நடவடிக்கைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மந்த நிலையை சமாளிக்க அவை ஓரளவு உதவும் என்ற போதிலும், இந்தியா எதிர்கொண்டு வரும் பொருளாதார சிக்கலின் தீவிரத்துடன் ஒப்பிடும்போது, இவை யானை பசிக்கு சோளப்பொறியாகும். 

மத்திய நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என்றாலும் கூட, அவற்றின் தாக்கம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்தான் இருக்கும். ஆனால், மந்தநிலையிலிருந்து பொருளாதாரத்தை மீட்க இந்த அறிவிப்புகள் போதுமானவை அல்ல. மத்திய நிதிநிலை அறிக்கை கடந்த மாதம் 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன; வாகனங்கள் விற்பனை வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு இந்த சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. ஆனால், மத்திய அரசின் நடவடிக்கைகள் நோய்க்கான சிகிச்சையாக அமையாமல், நோயின் அறிகுறிகளுக்கான சிகிச்சையாக அமைந்திருப்பது தான் மிகவும் துரதிருஷ்டவசமானதாகும். 

இந்தியப் பங்கு சந்தைகள் வீழ்ச்சியடைந்ததற்கு அவற்றில் முதலீடு செய்திருந்த ரூ.23,000 கோடியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்ப எடுத்தது தான் காரணம் ஆகும். பங்கு சந்தை முதலீடுகள் மற்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் லாபத்திற்கு வரி விதிக்கப்பட்டதால் தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்ப எடுத்ததாக நினைத்துக் கொண்டு, அந்த வரிகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. 

ஆனால், பங்கு சந்தைகளின் வீழ்ச்சிக்கு புதிய வரிகள் மட்டுமே காரணமல்ல. இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்து விட்டதால், அவற்றில் செய்யப்படும் முதலீடுகள் மீது போதிய லாபம் கிடைக்காது என்பதால் தான், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பங்குகளில் இருந்து தங்கத்திற்கு மாற்றுகின்றனர். 

அதேபோல், வாகன விற்பனை, வீடுகள் விற்பனை ஆகியவை மந்தமடைந்ததற்கான காரணங்களை அறியாமல், அவற்றின் விற்பனையை ஊக்குவிப்பதற்காக அரசுத் துறைகளுக்கு புதிய வாகனங்களை வாங்குவது உள்ளிட்ட பல சலுகைகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது சிக்கலைத் தீர்க்காது. வாகன விற்பனை குறைந்திருப்பதை தனித்த நிகழ்வாக பார்க்காமல், அதற்கு அடிப்படைக் காரணம் என்ன? என்பதை கண்டறிந்து அவற்றை சரி செய்வது தான் பயனுள்ளதாக இருக்கும். 

எனவே, இந்திய பொருளாதாரத்தின் சரிவை ஒப்புக்கொண்டு, அதை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும். சந்தைக்கு புத்துயிரூட்ட ஜிஎஸ்டி குறைப்பு, ஏற்றுமதிக்கான சலுகைகள், கட்டமைப்புத் திட்டங்களின் மீதான அரசின் செலவுகளை அதிகரித்தல், ஊரக சந்தைகளுக்கு புத்துயிரூட்டி, தேவைகளை அதிகரித்தல் உள்ளிட்ட சீர்திருத்தங்களை மத்திய அரசு எடுக்க வேண்டும். அரசின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரும் ஆதரிக்க வேண்டும்”, என அந்த அறிக்கையில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *