தன்னை தானே காயப்படுத்திக்கொண்ட நிர்பயா குற்றவாளி-தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க புதிய முயற்சி

டெல்லி, பிப்ரவரி-20

நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனையை தள்ளிப் போடுவதற்காக குற்றவாளி வினய் ஷர்மா தன்னை தானே காயப்படுத்திக் கொண்டுள்ளார்.

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1-ம் தேதி தூக்கிலிட டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது.

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா, தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து வினய் ஷர்மா, தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3ம் தேதி தூக்கிலிடும்படி புதிய தேதியை டெல்லி நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் செய்துவருகிறது.

இந்த நிலையில் மேலும் ஒரு முயற்சியாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வினய் ஷர்மா, கடந்த 16ம் தேதியன்று சுவரில் தனது தலையை மோதி காயம் ஏற்படுத்திக்கொண்டுள்ளார். உடனடியாக அவரை மீட்ட சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, முதலுதவி அளித்துள்ளனர்.

இதற்கு முன்னரும், சிறையில் உள்ள கிரில்லில் தனது கையை கொடுத்து, எலும்பு முறிவு ஏற்படுத்த முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. நல்ல உடல்நலத்துடன் இருந்தால் மட்டுமே கைதி தூக்கிலிடப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *