பொருளாதார மந்த நிலையை அரசு ஒப்புக்கொள்ள மறுக்கிறது-மன்மோகன் சிங் குற்றச்சாட்டு
டெல்லி, பிப்ரவரி-20
பொருளாதார மந்த நிலையை அரசு ஒப்புக்கொண்டால் மட்டுமே அதை சரி செய்ய முடியும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
மான்டேக் சிங் அலுவாலியாவின் “Backstage” புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: முன்னாள் திட்டக்குழு துணை தலைவர் தனது புத்தகத்தில் காங்., அரசின் பலவீனங்கள் குறித்து மிக சிறப்பாக எழுதி உள்ளார். இந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்.

ஏனெனில் தற்போதைய அரசு பொருளாதார மந்த நிலை குறித்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இது நமது நாட்டிற்கு நல்லதல்ல. பிரச்னையை அவர்கள் ஏற்று கொள்ளாத வரை தீர்வு காண முடியாது. நீங்கள் சந்திக்கும் பிரச்னைகளை புரிந்து கொள்ளவில்லை என்றால் அதை சரி செய்வதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவோ, நம்பகமான பதில்களை உங்களால் பெறவோ முடியாது. இது தான் உண்மையில் ஆபத்து.
2024-25 க்குள் நாட்டின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர்களை எட்ட வேண்டும் என்பது போற்றத்தக்க சிந்தனை. 3 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இருமடங்காகும் என எந்த காரணத்திற்காகவும் எதிர்பார்க்க முடியாது.
1990 களில் நாட்டின் பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் காணப்பட்டதற்கு முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், ப.சிதம்பரம், அலுவாலியாக ஆகியோரின் முக்கிய பங்களிப்பே காரணம். ஒவ்வொரு காலாண்டிலும் சீர்திருத்தம் செய்ய முடிந்தது. இவ்வாறு அவர் பேசினார்.