அவிநாசி அருகே பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து: 20 பேர் பலி

திருப்பூர், பிப்ரவரி-20

சேலத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசு சொகுசு பேருந்தும் கேரளாவில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் அவிநாசி அருகே நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அதிகாலை 3.30 மணியளவில் சேலத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசு சொகுசு பேருந்தும் கேரளாவிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சிக்கிய பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், அந்த வழியாக சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த பயங்கர விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 48 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் திருப்பூர், கோவை, அவிநாசி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

அவிநாசி கோர விபத்து குறித்து காவல் துறையினர் விசாரித்ததில், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் சாலையில் இருந்த தடுப்பை கவனிக்காமல் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர்கள் இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் தப்பியோடியுள்ளார்.

இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். நிகழ்விடத்திற்குச் சென்று நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், விபத்து குறித்துக் கேட்டறிந்தார்.

இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விபத்து குறித்து கேரள அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து ஒரு மீட்புக்குழு அனுப்பப்பட்டுள்ளது. உடல்களை அடையாளம் கண்டு அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

தற்போது மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் காயமடைந்தவர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன என ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *