மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம்-அமித்ஷாவை சந்தித்த பின் கெஜ்ரிவால் பேட்டி
டெல்லி, பிப்ரவரி-19
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பின்போது ஷகீன் பாக் போராட்டம் குறித்து பேசவில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. டெல்லி முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு டெல்லி தலைமை செயலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
இந்த சந்திப்பானது சுமூகமான முறையில் நல்ல சந்திப்பாக அமைந்தது. பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். டெல்லியின் வளர்ச்சிக்காக மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து பணியாற்ற இருவரும் ஒப்புக்கொண்டோம். நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்.
பிப்ரவரி 24, திங்கள்கிழமை முதல் மூன்று நாள்கள் பேரவை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த சந்திப்பின்போது ஷகீன் பாக் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், அது குறித்து பேசவில்லை என்றார்.