நதிநீர் பங்கீட்டிற்கு குழு அமைப்பு-முதல்வர் பழனிசாமி
திருவனந்தபுரம், செப்டம்பர்-25
நதிநீர் பங்கீடு மற்றும் புதிய ஒப்பந்தங்கள் குறித்து பேச இரு மாநிலத்திற்கும் பொதுவாக தலா 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என தமிழக மற்றும் கேரள முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் – கேரளா இடையிலான நதி நீர் பிரச்சனைகளை பேசி தீர்க்க இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது. அதற்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முல்லை பெரியாறு, பரம்பிகுளம்-ஆழியாறு உள்ளிட்ட நதிநீர் விவகாரங்கள் குறித்து பினராயி விஜயனுடன் பேச இருப்பதாகவும், இதில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

இதனையடுத்து, திருவனந்தபுரம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்தார். அப்போது மலர் கொத்தும், சால்வையும் போர்த்தி வரவேற்றார். தமிழக முதல்வருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இருதரப்பிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழக அரசு தரப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமை செயலாளர் சண்முகம், முதலமைச்சரின் செயலாளர் சாய்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கேரளா மாநில அரசு சார்பில் முதலமைச்சர் பினராயி விஜயன், நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, மின்சாரத்துறை அமைச்சர் மணி, வனத்துறை அமைச்சர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து, இரு மாநில முதல்வர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், இரு மாநில மக்களும் சகோதர உணர்வுடன் பழகுகின்றனர். பரம்பிகுளம்-ஆழியாறு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதாக குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 15 ஆண்டுகளுக்கு பிறகு நதிநீர் பங்கீடு குறித்து தமிழகம்-கேரளா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தையானது சுமூகமாக நிறைவேறியது. பரம்பிகுளம்-ஆழியாறு திட்டத்திற்காக இரு மாநிலத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்து அதன் அடிப்படையில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

இதேபோன்று, பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்திற்கும் தனிக்குழு அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். முல்லை பெரியாறு அணை குறித்து கூட பேசி தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனக்கூறிய முதல்வர் பழனிசாமி, இரு மாநில மக்கள் மற்றும் விவசாயிகள் பிரச்சனை இல்லாமல் நீரை பங்கீட்டு கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த ஆலோசனை நடைபெற்றதாக கூறினார்.
மேலும், நதிநீர் பங்கீட்டிற்கு அமைக்கப்பட்ட குழுவின் செயல்பாடுகளை இரு மாநில தலைமை செயலர்களும் 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்வார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். மேலும், இந்த பேச்சுவார்த்தை தொடக்கம் தான் என்றும், இரு மாநிலங்களுக்கிடையே உள்ள சிறுசிறு பிரச்சனைகள் விரைவில் பேசி தீர்க்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.