போராட உரிமை உண்டு, ஆனால் பிறரையும் மதிக்க வேண்டும்-ஷாகீன் பாக் போராட்டத்தில் மத்தியஸ்த குழு பேச்சு

டெல்லி, பிப்ரவரி-19

டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் நடத்துபவர்கள் போராட உரிமை இருக்கிறது, அதேசமயம், மற்ற குடிமக்களின் உரிமையை மதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்தியஸ்த பேச்சுவார்த்தை குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக டெல்லியின் ஷாகின்பாக் பகுதியில் இரண்டு மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பெண்கள், குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் நடக்கும் போராட்டத்தால் பெரும் போக்குவரத்து நெரிசல் இருப்பதாக குற்றம்சாட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பேச்சுவார்த்தை நடத்த மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் ஆகியோரை மத்தியஸ்த குழுவாக நியமித்தது. இந்த குழு ஷாகீன் பாக் போராட்டக் குழுவினருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

சாதனா ராமச்சந்திரன் பேசுகையில், “போராட்டம் நடத்த உங்களுக்கு உரிமை உண்டு அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஆனால், மற்ற குடிமக்களின் உரிமையும் பாதிக்கப்படக்கூடாது அதை மதிக்க வேண்டும்.

இப்படி அனைவரும் சாலையை மறித்து போராட்டம் நடத்தினால், மக்கள் எங்கு செல்வார்கள். நாம் அனைவரும் சேர்ந்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். நாம் ஒவ்வொருவரையும் கவனிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *