பிப்.24 முதல் 28 வரை தமிழகம் முழுவதும் ஜெ. பிறந்தநாள் & பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்-ஓபிஎஸ், ஈபிஎஸ்

சென்னை, பிப்ரவரி-19

வரும் 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் பிப்.24 முதல் 28 வரை பிறந்தநாள் மற்றும் பட்ஜெட் விளக்கக் கூட்டம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட உள்ளதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்:

“அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் தனது வாழ்நாளை மக்களுக்காகவே அர்ப்பணித்து, மறைந்த ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டும், தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்களை விளக்கியும் 24.2.2020 – திங்கட்கிழமை முதல் 28.2.2020 – வெள்ளிக்கிழமை வரை சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடக்கிறது.

கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், கட்சி அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு உரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.

கட்சி தலைமையால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஜெயலலிதா பிறந்த நாளான 24.2.2020 அன்று ஆங்காங்கே அவரின் திருவுருவச் சிலைக்கு அல்லது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்”. இவ்வாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *