பா.ஜ.க.வுக்கு பைத்தியம் பிடித்து விட்டது-சிவசேனா
மும்பை, பிப்ரவரி-19
ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள் இருக்கக் கூடாது என கூறுவது அரசுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்ற நிலையையே காட்டுகிறது என சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
ராணுவத்தில் பெண்களை உயர் பதவியில் நியமிக்கலாம். மகளிர் அதிகாரிகளுக்கான நிரந்தர கமிஷனை உருவாக்க வேண்டும். அதற்கு உங்கள் மனநிலையில் மாற்றம் வர வேண்டும் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
இது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக தாக்கி சாம்னாவில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள் வரக் கூடாது. அது எதிரி நாட்டிற்கு சாதகமாக அமைந்து விடும் என்ற மத்திய அரசிற்கு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியாக இருக்கும். பெண்களால் கடினமாக பணிகளை செய்ய முடியும் என்பதில் சந்தேகம் எழுப்புவது தான் முற்போக்கு பற்றி பேசும் அரசின் உண்மையான நிலைப்பாடு.
அரசு தனது மனநிலையை மாற்ற வேண்டியது அவசியம். 1971 ல் பிரதமர் இந்திரா தலைமையிலான அரசால் தான் இந்தோ-பாக் போரில் நாம் வெற்றி அடைய முடிந்தது. மத்திய அரசுக்கு பைத்தியம் பிடித்து விட்டது.
ஒரு நாள் பெண்கள் ராணுவ படைகளுக்கும் தலைமை ஏற்பார்கள். உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறிய கருத்துக்கள் அவர்களின் பிற்போக்கு சிந்தனையை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.