திண்டுக்கல் மாவட்டம்: குடிநீர் பிரச்சனைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? பட்டியலிட்ட அமைச்சர் S.P.வேலுமணி

சென்னை, பிப்ரவரி-19

திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பட்டியலிட்டு பேரவையில் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, செந்தில்குமார் ஆகியோர் எழுப்பிய சிறப்பு கவன தீர்மானத்திற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்து பேசினார்.

பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில், 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,779 குடியிருப்புகள் உள்ளன. இம்மாவட்டத்தில் இயல்பை விட, 27 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில், 27 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம், 12 லட்சத்து 90 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில், 49.29 மில்லியன் லிட்டர் குடிநீர் தினமும் வழங்கப்படுகிறது.

கூட்டு குடிநீர் திட்டங்களின் நீர் ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில், 5 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 54 கூடுதல் நீர் ஆதாரங்களும், 4 புதுப்பிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நடப்பு நிதியாண்டில், 12 கூட்டு குடிநீர் திட்டங்களில், 8 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 14 பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு, 6 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் கூட்டு குடிநீர் திட்டம், நத்தம் கூட்டு குடிநீர்த் திட்டம், பழநி குடிநீர் மேம்பாட்டு திட்டம், வடுகப்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் சீரான முறையில் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

பழனி நகராட்சியில், கோடைக்கால நீர் தேக்கத்தினை விரிவுப்படுத்துதல், உள்ளிட்ட குடிநீர் மேம்பாட்டு பணிகள், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

46 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கொடைக்கானல் நகராட்சி குடிநீர் மேம்பாட்டு திட்டத்தில், 94 சதவீதம் பணிகள் முடிவுற்றுள்ளன. இந்த பணிகள் வருகிற மே மாதம் நிறைவடையும்.

திண்டுக்கல் மாநகராட்சிக்கான தனி குடிநீர் திட்டம் ரூ.70 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆத்தூர் குடிநீர் திட்டத்தில், ஆத்தூர் அணையின் தென்புறம், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1.6 டி.எம்.சி. நீரினை கூடுதலாக தேக்கும் வகையில் கூடுதல் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் நத்தம் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் உள்ள குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண, 6 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அனைத்து பணிகளும் வருகிற மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெற உள்ளன. மேலும், ஊராட்சி பகுதிகளில் கனிம நிதியின் மூலம், 9 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாலசமுத்திரம் பேரூராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டம், 9 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பில், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசாணை வழங்கப்படும் நிலையில் உள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள, திண்டுக்கல் மாநகராட்சி, 7 பேரூராட்சிகள் மற்றும் 816 ஊரக குடியிருப்புகளுக்கான, கூட்டுக் குடிநீர் திட்டத்தின் நீராதாரத்தை மேம்படுத்த, 72 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பில், விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நிர்வாக அனுமதி வழங்கும் நிலையில் உள்ளது.

கொடைக்கானல் நகராட்சியில், கோடைக்கால நீர் தேக்கத்தின் கரைகளை உயர்த்தி, கூடுதலாக தண்ணீரை தேக்குவதற்கான பணிக்கு, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருத்திய நிர்வாக அனுமதி வழங்கும் நிலையில் உள்ளது.

நடப்பாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளில், குடிநீர் பிரச்சனை ஏற்படாமல் இருக்க, பற்றாக்குறை உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, 5 கோடியே 96 லட்சம் ரூபாய் கோடி மதிப்பீட்டில், 323 பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 158 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய 165 பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *