ஜெயலலிதா பிறந்த தினம்: பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிப்பு
சென்னை, பிப்ரவரி-19
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் இனி, மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் தமிழக சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதில், ”முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும். ஒவ்வோர் ஆண்டும் இந்த தினம் தொடர்ந்து அனுசரிக்கப்படும். பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21 வயதாகும் போது ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளின் சமூகப் பொருளாதார நிலையை கருதி இந்த சிறப்பு உதவித்தொகை அரசு சார்பில் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
பாலினச் சமநிலையை ஏற்படுத்த முயலும் மாவட்டங்களில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாவட்டங்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.